யாழ் சாவகச்சேரி வைத்தியசாலை சம்பவங்கள்; மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட கவனம்
யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கடந்த நாட்களில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக கொழும்பில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முக்கியமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்த கலந்துரையாடல் எதிர்வரும் 30ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சாவகச்சேரி வைத்தியசாலையின் அத்தியட்சகராக பணியாற்றிய இராமநாதன் அர்ச்சுனா அங்கு இடம்பெற்றதாகக் கூறப்படும் சில முறைகேடுகள் தொடர்பில் வெளிப்படுத்தியிருந்தார்.
விசேட கலந்துடையாடலுக்கு அழைப்பு
இதனையடுத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சாவகச்சேரி கிளை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன், வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை இடமாற்றுமாறும் வலியுறுத்தியிருந்தனர்.
தொடர்ந்து வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா இடமாற்றப்பட்டதுடன் இதுகுறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.
இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஏற்பாடு செய்துள்ளது.
இது தொடர்பான கடிதம் சுகாதார அமைச்சின் அதிகாரிகள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட தரப்பினருக்கும், வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட தரப்பினருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் தெரிவித்தார்.
இதேவேளை, நோய் நிலைமையால் பாதிப்படைந்த ஒருவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட சந்தர்ப்பத்தில் அங்கு சிகிச்சை வழங்குவதற்கு யாரும் இருந்திருக்கவில்லை வெளியான குற்றச்சாட்டுத் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.