பொலிஸாரால் பலியான யாழ் இளைஞன் ; அச்சுறுத்தலுக்கு மத்தியில் சவப்பெட்டியுடன் வீதிக்கிறங்கிய உறவுகள்
அல்லைப்பிட்டியில் வைத்து ஊர்காவற்றுறை பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட இளைஞனின் இறுதிக் கிரியைகள் வட்டுக்கோட்டை - சித்தங்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று வியாழக்கிழமை (12) இடம்பெற்றது.
அதன் பின்னர் பதாகைகளை தாங்கியவாறு சவப்பெட்டியுடன் வந்த உறவுகள் வீதியில் இருந்து எமது பிள்ளைக்கு நீதி வேண்டும், பொலிஸாரின் அராஜகம் தொடர்கிறது" என கோஷமிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மறைமுக அச்சுறுத்தல்
எனினும் அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞனுக்கு நீதி கோரி போராட்டங்களை முன்னெடுக்க வேண்டாம் என வட்டுக்கோட்டை பொலிஸார் மறைமுக அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபரின் உறவினர்களிடம் ஏற்கனவே வாக்குமூலங்கள் பெறப்பட்ட நிலையில், துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்களிடமும், சம்பவ தினத்தன்று கடமையில் இருந்த ஏனைய பதவிநிலை உத்தியோகத்தர்களிடமும் வாக்குமூலங்கள் பெறப்படவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவால் தெரிவிக்கப்பட்டது.