இரவு நேர வைத்தியர்கள் எங்கே? யாழில் முக்கிய வைத்தியசாலை ஒன்றின் அவல நிலை!
யாழ்.வடமராட்சி கிழக்கு அம்பன் பிரதேச வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டியோ அல்லது மருத்துவர்களோ இரவு வேளைகளில் இல்லாததால் நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அம்பன் பிரதேச வைத்தியசாலையில் இரண்டு மருத்துவர்கள் பகலில் கடமையில் உள்ளனர். ஆனால் இரவு வேளைகளில் மருத்துவர்கள் எவரும் கடமையாற்றுவதில்லையென நோயாளிகள் தெரிவித்துள்ளனர்.
இரவு வேளைகளில் மருத்துவமனைக்கு அவசர நோயாளர்கள் செல்லும் போது நோயாளர் காவு வண்டி மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்புவது வழமையாகும்.
இவ்வாறான நிலையில் நேற்று (19-09-2024) அம்பன் பிரதேச வைத்தியசாலைக்கு நாகர்கோவில் பகுதியில் இருந்து வலிப்பு ஏற்பட்ட சிறுமியை அவரது பெற்றோர் இரவு 8:30 மணியளவில் கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால் அங்கு அம்பன் பிரதேச வைத்தியசாலையினுடைய நோயாளர் காவு வண்டி இல்லை. அது ஏங்கே என்று கேட்டபோது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவரும் இல்லாத நிலையில், நோயாளர் காவு வண்டியும் இல்லை. அவசர நோயாளர்களின் நிலை என்ன? என பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனையடுத்து, அம்பன் பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர்கள் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை நோயாளர் காவு வண்டியை அழைத்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர்.
இதனால் சுமார் 50 நிமிடங்கள் வரை தாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.