தமிழகத்தை உலுக்கிய ஆணவக்கொலை;
இந்தியாவின் - தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 27 ஆம் திகதி ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
27 வயதான கவின் செல்வ கணேஷ் என்ற இளைஞனை 24 வயதான உப காவல்துறை பரிசோதகரின் மகனான சுர்ஜித் என்பவர் வெட்டிக் கொலை செய்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தொடர் போராட்டத்தில் கவினின் உறவினர்கள்
கடந்த 27ஆம் திகதி குறித்த இளைஞரை சுர்ஜித் உந்துருளியில் அழைத்துச் சென்று வெட்டி கொலை செய்துள்ளார். சம்பவம் தொடர்பில் பாளையங்கோட்டை காவல்துறையில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய சந்தேக நபரான சுர்ஜித் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சுர்ஜித்தின் சகோதரியும், கவினும் சிறுவயதிலிருந்து ஒன்றாகக் கல்வி பயின்று வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. கவின் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரிடம் பேசுவதை தவிர்க்குமாறு, சுர்ஜித் தனது சகோதரியிடம் தெரிவித்துள்ளார்.
பலமுறை கண்டித்தும் அவர் கேட்காததினால் இளைஞரைக் கொலை செய்ததாகச் சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இந்த கொலைக்குத் தூண்டுதலாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் சுர்ஜித்தின் பெற்றோரை கைது செய்யும் வரை, கவினின் உடலைப் பொறுப்பேற்கப் போவதில்லை எனக் கூறி கவினின் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந் நிலையில் 27 வயதான கவின் ஆணவ கொலை சம்பவத்திற்கு அரசியல் பிரமுகர்களும் சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.