எதிர்த்தரப்பு எம்.பிக்களின் வீடுகளிற்கு போனது உண்மைதான்; வெளியான அதிர்ச்சி தகவல்!
அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 11 அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்கு தாம் உட்பட சிலர் முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்த குற்றச்சாட்டை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமன்ன மறுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ரேணுகா பெரேரா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட மற்றும் தானும் அண்மையில் அனுராதபுரத்திற்கு விஜயம் செய்திருந்த போது நாடாளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்னவின் இல்லத்திற்கு சென்றோம் என்றார்.
இந்த விடயத்தை கேள்விப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வீரவன்ச ஆத்திரமடைந்ததாகவும், எனவே அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் பெரும்பான்மையைப் பறிக்கும் நோக்கில் ஒரு குழு செயற்படும் பட்சத்தில், அதிக ஆதரவைப் பெறுவதற்காக இது தொடர்பான கலந்துரையாடல்களை நடத்துவது சாதாரண நிகழ்வாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
ரேணுகா பெரேரா ஸ்ரீலங்கா மகாஜன கட்சியின் முன்னாள் உறுப்பினராகவும், தனது தந்தையின் நெருங்கிய நண்பராகவும் இருப்பதனால், அசங்க நவரத்னவுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எதிரிமான்ன தெரிவித்தார்.
இதேவேளை, நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் விமல் வீரவன்ச பல தகவல்களை அம்பலப்படுத்தியிருந்தார்.
பசில் ராஜபக்சவின் பின்னணியில் உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்து, அசங்க நவரட்னவின் வீட்டுக்கு சென்ற தகவலை அம்பலப்படுத்தினார்.
அத்துடன், சுதந்திரக்கட்சியின் நிமல் சிறிபாலடி சில்வாவை தொடர்பு கொண்டு, சுகாதார அமைச்சு பதவி வழங்குவதாக மகிந்தானந்த அளுத்கமகே, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்டவர்கள் பேரம் பேசியதாகவும் வெளிப்படுத்தியிருந்தார்.