பத்மேவுடன் தொடர்பு; ஓசியில் வெளிநாடு சென்ற 5 நடிகைகள் மீது விசாரணை
பாதாள உலகக் கும்பலின் முக்கிய நபரான கெஹெல்பத்தார பத்மே (Kehelbaddara Padme) என்பவருடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒரு பெண் சட்டத்தரணி மற்றும் ஐந்து நடிகைகள் மீது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நேற்று (31) கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
‘கணேமுல்ல சஞ்சீவ’ (Ganemulla Sanjeewa) கொலை வழக்கில் துப்பாக்கிதாரியான கொலையாளிக்கு உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்ட சட்டத்தரணி தமாரா குமாரி அபேரத்ன (Thamara Kumari Abeyrathne) தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகச் சிஐடி அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

நடிகைகள் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா?
விசாரணையின் மூலம், கொலையாளி ஒரு சட்டத்தரணி போல வேடமிடுவதற்காகத் தமாரா குமாரி அவருக்கு இரண்டு கழுத்துப் பட்டிகள், சட்டத்தரணி வாகனச் சின்னம் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர், தண்டனைச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் தொடர்பான பிரதிகள், மற்றும் போலி சட்டத்தரணி அடையாள அட்டையைத் தயாரிக்கத் தேவையான புகைப்படங்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
அவரை மேலும் விசாரிப்பதற்காக 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கக் கோரி சிஐடி நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்துள்ளது.
பிரதான சந்தேகநபரான கெஹெல்பத்தார பத்மேயுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி, அவருடன் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்த ஐந்து நடிகைகள் தொடர்பாகவும் விசாரணை நடைபெறுவதாக அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இந்த நடிகைகள், பாதாள உலகக் குழுவின் போதைப் பொருள் கடத்தல், பணமோசடி, சட்டவிரோத ஆயுதக் கடத்தல் போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா என்பதைக் கண்டறியவே விசாரணை நடத்தப்படுகிறது.
அதேவேளை இந்த விசாரணையின் முன்னேற்ற அறிக்கையை எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு தலைமை நீதவான், சிஐடிக்கு உத்தரவிட்டுள்ளார்.