சுற்றுலா வழிகாட்டியை கடலுக்குள் தள்ளிய வெளிநாட்டவர்; பெரும் சர்ச்சை
இலங்கை சுற்றுலா வழிகாட்டி ஒருவரை படகிலிருந்து கடலுக்குள் தள்ளிய இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய ஊடகமான RT வெளியிட்டுள்ள குறித்த காணொளியில், சுற்றுலா வழிகாட்டி ஒருவர் படகில் அமர்ந்து தண்ணீர் அருந்திக்கொண்டிருக்கும்போது, சுற்றுலாப் பயணி ஒருவர் அவரைத் திடீரென கடலுக்குள் தள்ளும் காட்சி பதிவாகியுள்ளது.

பலரும் கண்டனம்
கடலில் விழுந்த வழிகாட்டியைப் பார்த்து குழுவிலிருந்த ஏனைய சுற்றுலாப் பயணிகள் சிரிக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்தச் சம்பவம் இலங்கையில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன், சுற்றுலா வழிகாட்டியிடம் இவ்வாறு நடந்துகொண்ட குழுவினருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் செய்தி வெளியிட்ட இஸ்ரேலிய ஊடகவியலாளர் டேனியல் அம்ராம், சம்பந்தப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் பதிலையும் பகிர்ந்துள்ளார்.
இதன்போது, “அது ஒரு நகைச்சுவைக்காகச் செய்யப்பட்டது. பணியாளர் நலமாக இருக்கிறார். அவரைத் துன்புறுத்தும் நோக்கம் எதுவும் இருக்கவில்லை” என அவர்கள் தெரிவித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.