10 லட்சம் மக்களை உடனடியாக வெளியேற இஸ்ரேல் உத்தரவு!
இஸ்ரேல் - ஹமாஸ் போர் இன்னும் முடிவுக்கு வராது நீடித்துவரும் நிலையில், வட காசாவில் உள்ள 10 லட்சம் மக்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை (7) இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தியதுடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருவதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
தெற்கு பகுதிக்கு வெளியேற வேண்டும் - இஸ்ரேல் எச்சரிக்கை
இந்நிலையில் நேற்றையதினம் (12 6-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில், வட காசாவில் உள்ள 10 லட்சம் மக்கள் அடுத்த 24 மணி நேரத்தில் துரிதமாக தெற்கு பகுதிக்கு வெளியேற வேண்டும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி ஐக்கிய நாடுகள் சபை ஊழியர்கள், பள்ளிகள் உட்பட அனைத்து இடங்களில் உள்ள பாலஸ்தீனியர்களை உடனே வெளியேறவும் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் வாழும் இலங்கையர்கள் தொடர்பில் ஜனாதிபதி பணிப்புரை
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பிற்கும் இடையில் நிலவும் கடுமையான மோதல்களை கருத்தில் கொண்டு இஸ்ரேலில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட அவசர தேவைகள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, இஸ்ரேலில் வாழும் இலங்கை மக்களின் தேவைகள் தொடர்பில் அதிகபட்ச தலையீட்டை வழங்குவதற்காக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த திணைக்களங்கள் இணைந்து விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளன.
இஸ்ரேலில் பணிபுரியும் அல்லது வேறு காரணங்களுக்காக தங்கியிருக்கும் இலங்கையர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பின் , இலங்கை அதிகாரிகளுக்கு நேரடியாகத் அறிவிப்பதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, தொலைபேசி எண் (+94) 117966396, வாட்ஸ்அப் எண் (+94) 767463391 அல்லது opscenga@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தேவையான தகவல்களை அறிய முடியும் என இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.