சிறையில் உயிரிழந்த தாய் ; இறுதிச் சடங்கில் இஷாரா செவ்வந்தியின் சகோதரன்
பாதாள உலக கும்பலைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தியின் சகோதரன் இன்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தனது தாயின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்வதற்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் இஷாரா செவ்வந்தியின் தாயார் மற்றும் சகோதரர் ஆகிய இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
பலத்த பாதுகாப்பு
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (11) இஷாரா செவ்வந்தியின் தாயார் மாரடைப்பு காரணமாக வெலிக்கடை சிறைச்சாலையினுள் உயிரிழந்தார்.
இஷாரா செவ்வந்தியின் தாயாரின் சடலம் கந்தானை கட்டுவெல்லேகம பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்ட நிலையில் அவரது இறுதிச் சடங்கு இன்று (15) நடைபெற்றது.
இதனால் அப்பகுதியைச் சுற்றி பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் சிறைச்சாலையில் உள்ள இஷாரா செவ்வந்தியின் சகோதரன் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தனது தாயின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.