இக்ஷாரா செவ்வந்தி மண்ணுக்குள் புதைத்த கையடக்க தொலைபேசி மீட்பு
பாதாள குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்ஜீவவை கொலை சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி பயன்படுத்தினார் எனக் கூறப்படும் கையடக்க தொலைபேசி சிக்கியுள்ளது.
கம்பஹா பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் தொலைபேசி மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட தொலைபேசியை ஆய்வு செய்த பின்னர் மேலும் பல முக்கிய தகவல்கள் அம்பலமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நேரில் அழைத்துச்சென்று விசாரணைகள், தேடுதல்கள்
இஷாரா செவ்வந்தி, ஜே.கே. பாய் உள்ளிட்ட தரப்புகளிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் பிரகாரம் தேடுதல் வேட்டைகளும், கைதுகளும் இடம்பெற்றுவருகின்றன.
நேற்றைய தினமும் தேடுதல் வேட்டை அரங்கேறியது. இதற்கமைய இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கினர் எனக் கூறப்படும் நால்வர், கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் உள்ளடங்குகின்றார். அவர் தனது அத்தையின் வீட்டில் செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்தார் எனக் கூறப்படுகின்றது.
கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரமே அடைக்கலம் கொடுத்தவர்கள் கைதாகியுள்ளனர்.
செவ்வந்தி தலைமறைவாகி இருந்த இடங்கள் மற்றும் சென்ற இடங்களுக்கு அவரை நேற்று நேரில் அழைத்துச்சென்று விசாரணைகள், தேடுதல்கள் இடம்பெற்ற போதே புதைக்கப்பட்டிருந்த நிலையில் தொலைபேசி மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.