இந்திய ரூபாய் இலங்கையின் நாணயமாக மாறுகின்றதா! வெளியான அதிர்ச்சித் தகவல்
இந்திய ரூபாயை இலங்கையின் நாணயமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தோன்றுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், அரசாங்கத் தலைவர்கள் தற்போதைய நெருக்கடியைப் பயன்படுத்தி நாட்டை இந்தியாவிடம் பணயக்கைதிகளாக இழுத்துச் செல்வதாகவும் அவர் கூறினார்.
அத்துடன் நாட்டின் தேசிய வளங்களை கொள்ளையடிப்பவர்களுக்கு விற்று இலங்கையை இந்தியாவின் 29வது மாநிலமாக மாற்றும் மனநிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இவ்வாறானதொரு குழு தொடர்ந்தும் நாட்டில் ஆட்சியமைப்பது ஆபத்தானது எனவும், உடனடியாக சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் எனவும் விமல் வீரவன்ச வலியுறுத்தினார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வேறு நாடுகளில் உள்ள நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் குறிப்பிட்டார்.
வேறு நாட்டிலிருந்து எரிபொருளை விநியோகிக்க வந்தாலும் அவர்களின் சொந்த செலவில் இலங்கைக்கு எரிபொருளை கொண்டு வர முடியாது எனவும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
அதேசமயம் எதிர்காலத்தில் சுமார் பத்து மணித்தியால மின்வெட்டு ஏற்பட்டால் அரசாங்கத்தினால் தனியாக மின்சாரம் வழங்க முடியாது எனவும் அதனை இந்திய நிறுவனத்திடம் ஒப்படைக்கலாம் எனவும் விமல் வீரவன்ச கூறினார்.