இன்று அரசு முக்கிய தீர்மானம்
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல விடயங்களை கருத்திற் கொண்டு இரண்டு வார காலத்திற்கு அரச அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளை இணையத்தில் நடத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் நாளாந்த எரிபொருள் பாவனையை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகின்றது.
இந்த நிலையில் இது தொடர்பான இறுதித் தீர்மானம் அடுத்த சில மணித்தியாலங்களில் எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான அரசாங்கத்தின் விசேட உயர்மட்ட கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரையில் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் எரிபொருள் மற்றும் எரிவாயுவைப் பெற நீண்ட வரிசைகள் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் வரிசைகள் 2-3 கிலோ மீற்றரை தாண்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்படும் கடைசி டீசல் கப்பல் நேற்று இலங்கை வந்தடைந்தது. அந்த எரிபொருள் கப்பலின் பின்னர், மீணடும் பணம் செலுத்துவதன் மூலம் இலங்கைக்கு அடுத்த எரிபொருள் கப்பல் ஒன்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிடப்படுகின்றது.
எப்படியிருப்பினும் நாட்டில் நிலவும் அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு முகங்கொடுத்து, எரிபொருள் மற்றும் எரிவாயுக் கப்பல்களுக்கு பணம் செலுத்துவதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் 20 சதவீதமான தனியார் பஸ்கள் மட்டுமே இயங்கும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் 13,000 பஸ்கள் இயக்கப்பட்ட போதிலும், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அது 4,000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.