மின்சாரக் கட்டணம் மேலும் அதிகரிக்கும் சாத்தியமா? வெளியான புதிய அறிவிப்பு
இலங்கையில் அதிகரித்து வரும் எரிபொருள் விலை மற்றும் செயல்பாட்டு நெருக்கடிகள் காரணமாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின் உற்பத்தி செலவுகள் மற்றும் திட்டமிடல் குறித்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையை தேசிய மின் கட்டமைப்பு இயக்க நிறுவனம் (NSO) சமர்ப்பித்துள்ளது.
நாட்டின் மின் விநியோகத்தை உறுதிப்படுத்தும் தேசிய அமைப்பு இயங்குநரக நிறுவனம், குறிப்பிட்ட சில மின் உற்பத்தி நிலையங்களில் டீசல் மூலமான மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கடந்த மார்ச் 30 ஆம் திகதி கணித்திருந்த டீசல் விலையான 376 ரூபாயை விட, தற்போது சுயாதீன மின் உற்பத்தியாளர்களுக்கு ஒரு லீற்றர் டீசல் 382 ரூபாயாக உயர்ந்துள்ளதே இந்தச் செலவு அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

அதிகரித்து வரும் இந்த எரிபொருள் செலவுகள் மற்றும் விநியோகச் சவால்கள் மின்சார சபையின் நிதி நிலைத்தன்மைக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக அந்த அறிக்கை எச்சரிக்கிறது.
இதனால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகளை முகாமை செய்வது குறித்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் தேசிய மின் கட்டமைப்பு இயக்க நிறுவனத்தால் வழிகாட்டல் கோரப்பட்டுள்ளது.
அத்துடன், கூடுதல் மின்சாரக் கட்டண உயர்வை நியாயப்படுத்தும் விரிவான தரவு அட்டவணைகளையும் வழங்கியுள்ளது.
கடந்த 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்த மின்சாரக் திருத்தத்தில், 30 அலகுகள் வரை பயன்படுத்தும் நுகர்வோருக்குச் சிறிய அளவிலான கட்டண உயர்வும், அதிகப்படியாகப் பயன்படுத்துவோருக்கு 25 சதவீதம் வரை கட்டண உயர்வும் விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு கட்டண உயர்வுக்கான சாத்தியக்கூறுகள் இந்த அறிக்கையின் மூலம் உருவாகியுள்ளன.