நிவாரணம் கொடுத்துவிட்டு கச்சதீவை கோருவது நியாயமா!
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உலர் உணவுப் பொதிகளை வழங்கி விட்டு கச்சதீவை மீட்பதற்கு இதுவே தருணம் எனக் கூறியிருப்பது தமிழகம் எமது தொப்புள் கொடி உறவா? என்ற கேள்வி எழுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் காட்டமாக தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் ,
அலிபாவா திருடர்கள் கதை பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். நமது நாட்டின் பொருளாதார பிரச்சினையை சாதகமாக பயன்படுத்தி இந்தியா தனது ஆதிக்கத்தை இலங்கையில் மேற்கொண்டு வருகின்றமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இலங்கையின் பொருளாதார வளங்களை இந்தியாவும் சீனாவும் போட்டி போட்டு பெற்றுக் கொள்ளும் நிலையில் இலங்கையின் அரிதான பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள் இருநாடுகளின் வசம் சென்றுள்ளன. சீனாவிடம் நுரைச்சோலை கையளித்தபோது இந்தியாவிடம் சம்பூர் அனல் மின் நிலையத்தை கையளித்தனர்.
கொழும்பு போர்ட் சிட்டி துறைமுகத்தை சீனாவிடம் கையளித்தபோது திருகோணமலை துறைமுகம் அதனை சூழவுள்ள பகுதிகளை இந்தியாவுக்கு தாரை வார்த்தார்கள். அதிவேக நெடுஞ்சாலையை சீனாவுக்கு தாரை வார்த்த போது யாழ் தேவி புகையிரதப் பாதையை இந்தியாவுக்கு வழங்கினர்.
இவ்வாறு இந்தியாவும் சீனாவும் இலங்கையின் வளங்களையும் வருமான மார்க்கங்களையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளன.
ஆகவே இலங்கைக்கு நிவாரண பொருட்களை வழங்குவதற்கு இந்தியா 13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவித்த அவர், ஒருவேளை , சிறையிலுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக முதலமைச்சர் நிபந்தனைகளை விதித்திருந்தால் உண்மையில் அவர்கள் தொப்புள் கொடி உறவுகள் தான். ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை என்றும் இராமலிங்கம் சந்திரசேகரன் விசனம் வெளியிட்டார்.