அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லாத நிலையில் தேர்தல் தேவையா?
அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லாத நிலையில் நாட்டில் தேர்தல் நடத்தப்படவேண்டுமா? என்பதை தேர்தல் ஆணைக்குழு தீர்மானிக்கும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
தேர்தல் தினம் தீர்மானிப்பது? தேர்தல் நடத்துவதா இல்லையா என்பதை தீர்மானிப்பது ? அல்லது தேர்தலுக்குரிய பணத்தினை எங்கே பெறுவது என தீர்மானிப்பது தேசிய தேர்தல் ஆணைக்குழுவினுடைய கடமையாகும்.
எதற்கும் பணமில்லை
ஆனால் தேர்தல் ஆணைக்குழு தேர்தல் என்று அறிவித்தால் தேர்தலுக்கு தயாராக இருக்கின்றோம். தற்பொழுது அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு கூட பணம் இல்லை.
அத்துடன் பாடசாலை மாணவர்களுக்கு தேவையான பாடசாலை சீருடை, பாடசாலை உபகரணங்கள் வாங்க கூட பணம் இல்லை.
அத்தியாவசிய பொருட்களின் விலை மற்றும் போக்குவரத்து சேவை மற்றும் ஏனைய செலவுகளை சமாளிப்பதற்கு கூட நாட்டில் பணம் இல்லாத நிலை காணப்படுகிறது.
இந்த நிலையில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமா இல்லையா என்பதை தேர்தல் ஆணைக்குழு தீர்மானிக்கும். தேர்தல் ஆணைக்குழு இவ்வாறான நிலையில் தேர்தலை நடாத்துவதற்கு தீர்மானித்து நிதியினை தேடி நடத்த தயாராக இருந்தால் நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்றும் அவர் கூறினார்.
அதேவேளை தேரதல் நடத்துவது தொடர்பில் நாங்கள் தீர்மானிக்க முடியாது என தெரிவித்த அவர் தேர்தல்கள் ஆணைக்குழுவே அதனை தீர்மானிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.