விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய இலங்கைப் பெண்ணை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
தற்போது சிறையில் உள்ள இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணொருவரை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையதென கூறப்படும் பணச்சலவை குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க சென்னையில் உள்ள விசேட தேசிய புலனாய்வு முகவரக நீதிமன்றம் அமுலாக்க துறைக்கு அனுமதி அளித்துள்ளது.
மேரி பிரான்சிஸ்கா லெட்சுமணன் என்ற குறித்த பெண் தமிழ்நாட்டின் புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பை கொண்டிருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் ஏற்கனவே தேசிய புலனாய்வு முகவரத்தினால் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்.
இது அந்த முகவரத்தினால் 2022 ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட பணச்சலவை வழக்குடன் தொடர்புடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையிலுள்ள வங்கிக் கணக்கொன்றிலிருந்து பணம் எடுப்பதறகு போலி இந்திய அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த நிதி, விடுதலைப்புலிகளின் மீளுருவாக்க செயற்பாடுகளுக்கானதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்தநிலையில், சட்டவிரோத பணப் பரிமாற்றங்களில் ஈடுபட்டுள்ள நபர்கள் மற்றும் வலையமைப்புகளை அடையாளம் காண்பதற்கு குறித்த பெண்ணை விசாரிப்பது அவசியம் என்று அமுலாக்க துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
நீதிமன்றம் அதை ஏற்றுக்கொண்டு இரண்டு நாட்கள் சிறையில் அவரை விசாரிக்க அதிகாரிகளுக்கு அனுமதியளித்தது.
சிறை விசாரணையின் போது மடிக்கணினிகள், அச்சுப்பொறிகள் மற்றும் பிற இலத்திரனியல் சாதனங்களைப் பயன்படுத்தவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது.