யாழில் மக்களின் பொறுப்பற்ற செயல்; கண்டுகொள்ளாத நல்லூர் பிரதேச சபை
யாழ்ப்பாணம் கோண்டாவில் கட்டையாலடி இந்து மயானத்திற்கு அருகில் , கழிவுகளை வீசி செல்பவர்களால் , அவ்வீதியூடாக பயணிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் , இந்து மயானத்திற்கு தகன கிரியைகளுக்கு வருவோரும் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். அது தொடர்பில் நல்லூர் பிரதேச சபை அசண்டையீனமாக உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கண்காணிப்பு கமராக்களை பொருத்தி நடவடிக்கை
குறித்த இந்து மயானத்திற்கு அருகாமையில் , யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் விடுதி , யாழ்ப்பாண நகருக்கு குடிநீரை வழங்கும் கிணறுகள் காணப்படுகின்றது.
உணவு கழிவுகள் , கோழி இறைச்சி கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை வீசி செல்வதனால் , அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன் , அவற்றின் கழிவுகளை நாய்கள் வீதியில் இழுத்து விடுவதால் , வீதியில் பயணிப்போரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
அத்துடன் , அவற்றை காகங்கள் உள்ளிட்டவை எடுத்து சென்று அயல்களில் போடுவதனால் ,அப்பகுதிகளிலும் சுகாதார சீர்கேடுகளும் இடம்பெறுகின்றன. எனவே அங்கு கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்ற நல்லூர் பிரதேச சபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கபப்ட்டுள்ளது.
மேலும் அப்பகுதிகளில் கண்காணிப்பு கமராக்களை பொருத்தி கழிவுகளை வீசி செல்வோரை இனம் கண்டு , அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.