போண்டி கடற்கரை அசம்பாவிதம்; மடக்கி பிடித்தவரை நேரில் சென்று பாராட்டிய பிரதமர்!
உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய போண்டி கடற்கரை துப்பாக்கி சூடு இடம்பெற்றபோது துப்பாக்கிதாரியை மடக்கிப் பிடித்த ரியல் ஹீரோவை வைத்தியசாலைக்கு சென்று அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ்( Anthony Albanese) பாராட்டினார் .
அவுஸ்திரேலிய நியூசவுத் வேல்ஸ் மாகாணம் சிட்னி நகரின் போண்டி கடற்கரையில், கடந்த 14 ஆம் திகதி மாலை யூத மத பண்டிகையான ஹனுக்கா கொண்டாட்டம் நடந்தது.

16 பேர் பலி 42 பேர் படுகாயம்
அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர், கூட்டத்தினரை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில், 16 பேர் பலியானதுடன் சுமார் 42 பேர் படுகாயம் அடைந்தனர்.
சம்பவத்தின்போது, தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரை, அஹ்மத் அல் அஹ்மத் (43) என்பவர் துணிச்சலுடன் மடக்கிப் பிடித்தார். அப்போது, மற்றொருவர் அஹ்மத் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

இதில் படுகாயமடைந்த அஹ்மத் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரை, அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ( Anthony Albanese) மற்றும் நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் கிறிஸ் மின்ஸ் ( Chris Minns ) நேரில் சந்தித்து பாராட்டினார்கள்.

அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ( Anthony Albanese), அஹ்மத், நீங்கள் ஒரு அவுஸ்திரேலிய வீரர். மற்றவர்களை காப்பாற்ற உங்கள் உயிரை ஆபத்தில் இட்டீர்கள் — போண்டி கடற்கரையில் அபாயத்தை நோக்கி ஓடி, ஒரு பயங்கரவாதியை நிராயுதப்படுத்தினீர்கள்.
மிக மோசமான தருணங்களில்தான் அவுஸ்திரேலியர்களின் சிறந்த பண்புகள் வெளிப்படும். ஞாயிற்றுக்கிழமை இரவில் நாம் அதையே கண்டோம். ஒவ்வொரு அவுஸ்திரேலியரின் சார்பாகவும், உங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் கிறிஸ் ( Chris Minns ) தனது X தளத்தில்,
“அஹ்மத் ஒரு நிஜ நாயகன். அவர், தனது உயிருக்கு நேரவிருந்த மிகப்பெரிய ஆபத்தை பொருட்படுத்தாமல், ஒரு பயங்கரவாதியை நிராயுதபாணி ஆக்கியதன் மூலம் எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றினார் என்பதில் சந்தேகமில்லை.

சற்று நேரத்திற்கு முன்பு அவருடன் நேரம் செலவிட்டதும், நியூ சவுத் வேல்ஸ் முழுவதும் உள்ள மக்களின் நன்றியை அவருக்கு தெரிவித்ததும் எனக்கு ஒரு பெருமையாக இருந்தது.
அஹ்மத்தின் தன்னலமற்ற துணிச்சல் இல்லையென்றால், இன்னும் பல உயிர்கள் பலியாகியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நன்றி அஹ்மத்” என்று பதிவிட்டுள்ளார்.