பொலிஸாரின் உடற்கமரா கொள்வனவில் முறைகேடா? ; வசந்த முதலிகே குற்றச்சாட்டு
இலங்கை பொலிஸாருக்காக 500 உடற்கமராக்கள் மற்றும் 70 இணைப்பு நிலையங்களைக் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்த ஆவணங்களைத் தயாரிக்கும்போது, ChatGPT மூலம் பெறப்பட்ட தகவல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் போராட்ட இயக்கத்தின் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், கொள்வனவு செய்யப்படவுள்ள உடற்கமராக்களின் தேவைகள், தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் பயன்பாடு தொடர்பான விதிமுறைகள் அடங்கிய ஆவணம், ChatGPT மூலம் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், ChatGPT வழங்கிய தகவல்கள் போதிய ஆய்வு மற்றும் திருத்தங்கள் இன்றி குறித்த ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த ஆண்டு மார்ச் மாதம் பொலிஸாரின் கொள்வனவுப் பிரிவினால் 500 உடற்கமராக்கள் மற்றும் 70 இணைப்பு நிலையங்களைக் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தக் கோரல் விடுக்கப்பட்டதாகவும் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
கடமையில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகளின் உடையில் பொருத்தப்படும் இந்தக் கமராக்கள் மூலம் சுற்றிவளைப்புகள் உள்ளிட்ட பொலிஸ் நடவடிக்கைகளை காணொளியாகப் பதிவு செய்து, அவற்றை பின்னர் சாட்சியங்களாகப் பயன்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் காவலில் இடம்பெறும் மரணங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களில் இடம்பெறுவதாகக் கூறப்படும் தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளைக் கருத்தில் கொண்டு, உடற்கமராக்களை அறிமுகப்படுத்துவது வரவேற்கத்தக்க நடவடிக்கை என வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
அதேவேளை, பொலிஸ் நிலையங்களுக்குள் கண்காணிப்பு கமராக்களை பொருத்துவதும் அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், உடற்கமராக்களை அறிமுகப்படுத்துவதில் பிரச்சினை இல்லை என்றும், அவற்றைக் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்த நடைமுறையிலேயே பிரச்சினை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு ஆதரவான ஒருவருக்கு சாதகமாக இந்தக் கொள்வனவு நடைமுறை அமைக்கப்பட்டுள்ளதாகவும், தொழில்நுட்ப ரீதியான சில குறைபாடுகள் காரணமாக கொள்வனவு செய்யப்படும் கமராக்களை முறையாகப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படக்கூடும் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தக் கொள்வனவு நடைமுறையில் பாரிய முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகக் குற்றஞ்சாட்டிய வசந்த முதலிகே, தற்போதைய ஒப்பந்தக் கோரல் நடைமுறையை இரத்துச் செய்து, புதியதும் வெளிப்படையானதுமான நடைமுறையொன்றை ஆரம்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.