இஷாரா செவ்வந்தி தொடர்பான விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பு
பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபராக அடையாளம் காணப்பட்ட இஷாரா செவ்வந்தி தொடர்பான விசாரணை அறிக்கை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த அறிக்கை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.
இஷாரா செவ்வந்தி தொடர்பான விசாரணைகள் நிறைவடையாத நிலையில், பாதுகாப்பு அமைச்சிலிருந்து பெறப்பட்ட 90 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவிற்கு அமைய, அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள், இதன்போது நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.
இந்தநிலையில், தடுப்புக்காவில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேகநபர்கள் தொடர்பான செயற்பாடுகள் கொழும்பு கோட்டை நீதவானின் கண்காணிப்பில் முன்னெடுக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதேவேளை 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஏனைய இரண்டு சந்தேகநபர்கள் இஷாராவிற்கு உதவியமை தொடர்பில் மாத்திரமே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மன்றுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் குறித்த இரண்டு சந்தேகநபர்களும் பெயர் குறிப்பிடப்படாத நிலையில், அவர்கள் தொடர்பான கட்டளைகளை பிறப்பிப்பதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தடுத்துவைக்கப்பட்டுள்ள 2 சந்தேகநபர்கள் தொடர்பிலும் பி- அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.