வெள்ளைக்கொடி விவகாரத்தை விசாரியுங்கள் ; கவீந்திரன் கோடீஸ்வரன் கோரிக்கை
2009இல் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த பொதுமக்களும், விடுதலைப் புலியினரும் சவேந்திர சில்வாவின் அனுமதியுடனேயே சுட்டுக்கொலை செய்யப்பட்டார்கள் என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
முறையான விசாரணை செய்து அதனுடன் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) நடைபெற்ற போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்படட குற்றங்களை ஒழிப்பதற்கான ஒரு தேசிய வேலைத்திட்டம் மற்றும் சட்டரீதியான கட்டமைப்பை வலுப்படுத்துதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, அண்மையில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஒரு விடயத்தை கூறியிருந்தார்.

அதாவது 2009இல் இறுதி யுத்தத்தின்போது வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த பொதுமக்கள், விடுதலைப் புலியினரை சவேந்திர சில்வாவின் அனுமதியுடன் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதனுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள், அப்போதிருந்த இராணுவத்திற்குரிய செயலாளர் கோதாபய ராஜபக்ஷ ஆகியோர் தண்டிக்கப்பட வேண்டியவர்களாக இருக்கின்றனர். யுத்தம் முடிவடைந்த பின்னர் 2009இல் இருந்து இன்னும் தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை.
இந்த நாட்டின் இராணுவத் தளபதியாக இருந்தவரே சரணடைந்த தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறியிருக்கின்றார்.
அவர்களுக்கான விசாரணைகளை கடந்த அரசாங்கமும் செய்யவில்லை, இந்த அரசாங்கமும் செய்யவில்லை.
இதனாலேயே தமிழ் மக்கள் உள்நாட்டு பொறிமுறையில் நம்பிக்கையற்றவர்களாக இருக்கின்றனர். இதன்காரணமாகவே நாங்கள் சர்வதேச விசாரணையை கோருகின்றோம்.
இந்த சர்வதேச விசாரணைகளின் மூலமே இதனுடன் தொடர்புடைய இராணுவ அதிகாரிகள், அரசியல்வாதிகளை தண்டிக்க முடியும். உள்நாட்டு பொறிமுறை ஊடாக இவர்களை தண்டிக்க முடியாது.
இதனாலேயே சர்வதேச விசாரணையை கோர வேண்டியவர்களாக இருக்கின்றோம். உயிர்த்த ஞாயிறுக் குண்டுத் தாக்குதல்களில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வோம் என்று இந்த அரசாங்கம் கடந்த காலங்களில் கூறினாலும் இன்று வரையில் மக்களின் இழப்புக்கு நியாயம் கிடைக்கவில்லை.
ஏனென்றால் இதில் சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிகள், அரசியல்வாதிகள் இருக்கின்றனர்.
அவர்களை தண்டித்தால் இந்த நாடு பிரளயமடையும் என்ற பயம் அரசாங்கத்திற்கு இருக்கின்றது. அரசாங்கம் சரியான குற்றவாளிகளை தண்டிக்க வேண்டுமென்றால் அது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
இல்லாவிட்டால் கடந்த கால அரசாங்கங்களை போன்றே இந்த அரசாங்கத்தையும் கருதுவோம் என்றார்.