மெட்டாவுக்கு எதிரான சர்வதேச வழக்கு ; கோடிக்கணக்கான பயனர்கள் பாதிப்பு
வட்ஸ்அப் தகவல்கள் பாதுகாப்பானவை என்றும் அவை "முழுமையான மறையாக்கம்" (End-to-End Encryption) செய்யப்பட்டவை என்று மெட்டா நிறுவனம் கூறி வருவது முற்றிலும் பொய் எனக்கூறி, அமெரிக்க நீதிமன்றத்தில் சர்வதேச அளவில் வழக்கொன்று தொடரப்பட்டுள்ளது.
வட்ஸ்அப் செயலியில் ஒரு செய்தியை அனுப்புபவர் மற்றும் பெறுபவரைத் தவிர மெட்டா நிறுவனத்தால் கூட அதைப் பார்க்க முடியாது என்பதே End-to-End Encryption தொழில்நுட்பமாகும்.
இதையே மெட்டா நிறுவனம் தனது விளம்பரங்களிலும், செயலியின் உள்ளேயும் பிரதானமாக குறிப்பிட்டு வருகிறது.

எனினும், சன் பிரான்சிஸ்கோ மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், மெட்டா மற்றும் வட்ஸ்அப் நிறுவனங்கள் பயனர்களின் "தனிப்பட்ட" உரையாடல்களைச் சேமித்து, ஆய்வு செய்து, அவற்றை அணுகும் வசதியைக் கொண்டுள்ளதாக மனுதாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதன் மூலம் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான பயனர்களை அந்த நிறுவனம் ஏமாற்றியுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கை இந்தியா, அவுஸ்திரேலியா, பிரேசில், மெக்ஸிகோ மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மனுதாரர்கள் இணைந்து தொடர்ந்துள்ளனர்.
அந்த நிறுவனத்தில் பணியாற்றிய அடையாளம் தெரியாத "உண்மையை வெளிக்கொணருபவர்கள்" (Whistleblowers) அளித்த தகவலின் அடிப்படையிலேயே இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
எவ்வாறாயினும் இந்தக் குற்றச்சாட்டுகளை மெட்டா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஆண்டி ஸ்டோன் கடுமையாக மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "வட்ஸ்அப் செய்திகள் முழுமையான மறையாக்கம் செய்யப்படவில்லை என்று கூறுவது முற்றிலும் முட்டாள்தனமானது மற்றும் பொய்யானது.
கடந்த பத்து ஆண்டுகளாக 'சிக்னல் புரோட்டோகால்' (Signal protocol) மூலம் வட்ஸ்அப் பாதுகாக்கப்படுகிறது. இந்த வழக்கு ஒரு ஆதாரமற்ற கற்பனைக் கதை” என்று கூறுகிறார்.
மேலும், இத்தகைய அவதூறான வழக்கைத்தொடர்ந்த மனுதாரர்களின் சட்டத்தரணிகள் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் மெட்டா நிறுவனம் எச்சரித்துள்ளது.
இந்த வழக்கு ஒரு "குழு நடவடிக்கையாக" அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று மனுதாரர்கள் நீதிமன்றத்தைக் கோரியுள்ளனர்.
பயனர்களின் தரவுப் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் கண்காணிப்பு குறித்து உலகளவில் விவாதங்கள் நடந்து வரும் நிலையில், இந்த வழக்கு பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.