அரசியல் ரீதியில் பாரம்பரிய மதத்தையும் கலாசாரத்தையும் சீரழிக்க திட்டம் ; நாமல் குற்றச்சாட்டு
தற்போதைய அரசாங்கம் தனது அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, இந்த நாட்டின் கலாசாரம் மற்றும் மதங்களுக்கு எதிராகச் செயல்படத் தயாராகி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் கே.டி. லால்காந்தவின் அண்மைக்கால உரைகள் இந்த உண்மையை உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோட் அணிந்திருப்பவர்களைத் தாக்குவேன் என்றும், காவி உடை அணிந்திருப்பவர்களை (மகா சங்கத்தினர்) தாம் பொருட்படுத்தப் போவதில்லை என்றும் அமைச்சர் லால்காந்த பகிரங்கமாகக் கூறியுள்ளார்.
அமைச்சரின் இந்த கருத்துக்கள், அரசாங்கத்தில் இருப்பவர்கள் தங்களின் அரசியலுக்காக உள்ளூர் கலாசாரத்தையும், மத விழுமியங்களையும் சீரழிக்கத் துணிந்துவிட்டனர் என்பதையே காட்டுகிறது என நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தின் இத்தகைய போக்கானது நாட்டின் நீண்டகாலப் பாரம்பரியங்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் அவர் இதன்போது எச்சரிக்கை விடுத்தார்.