இலங்கை மக்களின் வாழ்க்கைச் சுமையை இதன்மூலம் குறைக்க முயற்சி!
ஜனாதிபதி ரணிலின் புதிய பொருளாதார வேலைத்திட்டத்தினால் பொருட்களின் விலை ஓரளவு குறைந்துள்ள போதிலும், அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் மூலம் மக்களின் வாழ்க்கைச் சுமையை மேலும் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன (Vajira Abeywardena) தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (24-08-2022) சிறிகொத்த கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமொன்றைக் கொண்டுவரும் பணிகளை ஜனாதிபதி விரைவாக முன்னெடுப்பார் என நம்புவதாக அவர் இங்கு தெரிவித்தார்.
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) கடனை மறுசீரமைத்து மீண்டும் உதவிகளைப் பெற ஜப்பானைத் தேர்ந்தெடுத்துள்ளார், ஜப்பான் அந்த வேலையைச் சரியாகச் செய்யும் என்று இலங்கை எதிர்பார்க்கிறது.” என்றும் கூறினார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த திரு வஜிர அபேவர்தன பின்வருமாறு தெரிவித்தார்.
“உலகில் உள்ள தலைவர்களுடன் ஒப்பிடுகையில், 50 வருட அனுபவமும், 45 வருட பாராளுமன்ற அனுபவமும் கொண்ட ஒரு தலைவரை தேசம் பெற்றுள்ளது.
இந்நிலையில், அந்த மாபெரும் தலைவரை அச்சமின்றி பயன்படுத்தி இலங்கையை மீட்க வேண்டும். வரலாற்றில் யாரேனும் தவறாகப் பார்த்தாலும் இன்று அப்படி நடக்கக் கூடாது. அப்படியானால், அனைவரும் ஒன்றிணைந்து இலங்கையை விரைவில் மீட்க வேண்டும்” என்றார்.