யாழ்.மாவட்டத்தில் கொரோனா பரவல் தீவிரம்; மாகாண சுகாதார பணிப்பாளர் விடுத்த அறிவுறுத்தல்
நாடெங்கும் இன்று சிவராத்திரி பூஜை வழிபாடுகள் ஆலயங்களில் நடைபெறவுள்ள நிலையில் யாழ்.மாவட்டத்தில் மக்கள் மிக அவதானத்துடனும் பொறுப்புடனும் நடந்து கொள்ளுமாறு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.
இது குறித்து பணிப்பாளர் விடுத்துள்ள அறிக்கையில்,
கடந்த வாரத்திலிருந்து யாழ் மாவட்டத்தில் கொவிட் - 19 பரவல் தீவிரமடைந்து வருவதனால் பக்தர்கள் மற்றும் பொது மக்களை அவதானமாக நடந்து கொள்ளவேண்டும்.
கோவில்களில் நடைபெறவுள்ள சிவராத்திரி வழிபாடுகளில் ஆகக் கூடியதாக 50 பேரை மட்டும் அனுமதிக்குமாறும் ஏனையோர் தத்தம் வீடுகளில் தங்கி நின்று எங்கும் நிறைந்துள்ள இறைவனை வழிபாடு செய்யலாம்.
மேலும் சிவராத்திரி நாளுடன் இணைந்து கோவில்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலாசார நிகழ்வுகளை இரத்து செய்து தனியே சமயாசார கிரியை நிகழ்வுகளை மட்டும் நடாத்துமாறும் ,மேற்கூறிய கட்டுப்பாட்டுகளுடன் நடைபெறவுள்ள இவ்வருட சிவராத்திரி வழிபாடுகளில் கொவிட் - 19 தொற்றுத் தடுப்புக்கான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடியுங்கள்.
எமது இவ்வேண்டுகோளுக்கு இந்து மதகுருமார்கள், இந்து மதத் தலைவர்கள், கோவில் அறங்காவலர் சபையினர், பக்தர்கள் மற்றும் பொது மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்