இலங்கை தீவில் பேரிடர் ; உயிர் மற்றும் சொத்து இழந்த அப்பாவி பொதுமக்கள்
இலங்கையில் ஏற்பட்ட கடும் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் அப்பாவி பொதுமக்கள் பெரும் உயிர் மற்றும் சொத்து இழப்பை சந்தித்துள்ளனர் என சமூக ஊடகவலைத்தள பதிவொன்றில் தகவல் வெளியாகியுள்ளது.
உலக புகழ்பெற்ற வானிலை நிறுவங்கள், அதாவது AccuWeather, BBC Weather மற்றும் Al Jazeera, முறையான முன்கூட்டிய எச்சரிக்கைகளை 10, 12 மற்றும் 14 நவம்பர் ஆகிய நாட்களில் வெளியிட்டன.
இதற்கு இணையாக, இலங்கை வானிலை அவதானிப்பு மைய பணிப்பாளர் மற்றும் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா உட்பட பல துறை சார்ந்த நிபுணர்கள் தொடர்ச்சியான எச்சரிக்கைகளை வழங்கி, அவசரகால தயார்நிலை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவையை வலியுறுத்தினர்.

ஆனாலும், நாட்டின் நிர்வாகம் முறையான முன்னேற்பாடுகளை எடுக்கவில்லை. 26 நவம்பருக்குள் மழை உக்கிரமடைந்த போதும், ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்க நேரலைக்கு தலைமை தாங்க தயாராக இல்லாமல், திரைப்பட துறை சார்ந்த செயற்பாடுகளில் நேரத்தை செலவழித்தார்.
தேசிய பேரிடர் முகாமைத்துவ சபை (NCDM) செயலாற்றாமையால், பேரிடர் சம்பவத்திற்கு பிறகு மூன்று நாட்கள் வரை மாவட்ட அரசும், அங்கு சார்ந்த நிறுவனங்களும் உடனடி நிதி உதவிகளை விடுவிக்க முடியாமல் தடுமாறினர்.
இதனால் பாதிக்கப்பட்டோர் 48 மணி நேரத்திற்கு மேல் உணவுத் தங்குமிடம், மருத்துவ உதவி போன்ற அடிப்படை தேவைகள் கூட பெற முடியாமல் தடுமாறினர்.
நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் வெளியேற்ற நடவடிக்கைகள் திட்டமிடப்படாததால், மழை பெருக்கம் பல இடங்களில் உயிர் மற்றும் சொத்து இழப்புகளை அதிகரித்தது.
இதுபோன்ற நிர்வாக மந்தத்திற்கும், அதனால் ஏற்படும் பேரழிவிற்கும் காரணமாக, சமூக வலைத்தளங்களில் மற்றும் நாடாளுமன்ற விவாதங்களில் அரசின் செயல்திறன் குறித்து கேள்விகள் எழுகின்றன.
Disaster Management Centre (DMC) கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தாலும், ஆண்டுதோறும் நிகழும் இயற்கை பேரிடர்களில் மாற்றம் ஏற்படவில்லை என சமூக வலைத்தளங்கள் குறிப்பிட்டுள்ளன.
மலையக மக்களுக்கு மிகப்பெரும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த இயற்கை பேரிடர்களில், நிர்வாக மந்தத்தால் ஏற்படும் பேரழிவுகள் தொடர்ச்சியாக நிகழ்வதால் நாட்டின் இயற்கை மற்றும் சமூக பாதுகாப்பு குறித்து முக்கிய அச்சங்கள் எழுந்துள்ளன என இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.