இலங்கையை ஆட்டிப்படைக்கும் பாதாள உலகக் கும்பல்கள் தொடர்பில் முக்கிய தகவல் வெளியானது
நாட்டில் 58 ஒழுங்கமைக்கப்பட்டபாதாள உலகக் கும்பல்களும், அவர்களைப் பின்தொடரும்1,400 சந்தேக நபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று வரும் சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்
இந்த ஆண்டு மட்டும் 17 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், 5 கத்திக்குத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு நடந்த 17 துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பொலிஸ் மற்றும் முப்படைகளின் ஆயுதப் படைகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் சில சம்பவங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டதாகவும், அதன்படி, அந்த அதிகாரிகளில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு நடத்தப்பட்ட விசாரணைகளில், 13 T56 ரக துப்பாக்கிகள், 15 ரிவால்வர்கள், 21 கைத்துப்பாக்கிகள், 75 12-bore ரக துப்பாக்கிகள், 7 ரிப்பீட்டர்கள், 805 ஷாட்கன்கள் மற்றும் 4 பிற துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.