கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு குறித்து வெளியாகின அதிர்ச்சி தகவல்கள்
கொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் நேற்று (16) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம், இரு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் விளைவு என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்தார்.
இதற்கமைய, இந்தச் சம்பவம் தொடர்பில் 3 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
சம்பவத்தில் 4 வயதுடைய சிறுவனும், 3 வயதுடைய சிறுமியும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்ததுடன், அவர்கள் சிகிச்சைக்காக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரு பிள்ளைகளின் நிலைமை சீராக உள்ளதாகவும், மருத்துவக் குழுவினர் பிள்ளைகளுக்கு தேவையான சிகிச்சைகளை அளித்து வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
ஜிந்துப்பிட்டி 125 வத்தை பகுதியிலேயே இந்தத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன், முச்சக்கர வண்டியில் வந்த குழுவினரே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.