நாட்டுக்கு வரும் உண்டியல் பணம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் உழைக்கும் அமெரிக்க டொலர் ஒன்றுக்கு உண்டியல் மூலம் பணப் பரிமாற்றம் செய்யும் நபர்கள் 240 ரூபாய் முதல் 250 ரூபாய் வரையான விலையை வழங்குவதாக தெரியவருகிறது.
வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்களிடம் அந்நாடுகளில் உள்ள பிரதிநிதிகள் டொலர்களை பெற்றுக்கொள்வதுடன் அவர்களின் இலங்கை பிரதிநிதிகள், இலங்கையில் உள்ள குடும்பத்தின் உறுப்பினர்களுக்கு ஒரு டொலருக்கு 240 முதல் 250 ரூபாவுக்கும் மேற்பட்ட தொகையை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் உண்டியல் ஊடாக அனுப்பி வைக்கப்படும் டொலர்கள் இலங்கை அரசின் கருவூலத்திற்கு கிடைப்பதில்லை எனவும், அதனை அந்நாடுகளில் பிரதிநிதிகள் வைத்துக்கொள்கின்றனர்.
இதேவேளை வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள், இலங்கைக்கு அனுப்பி வைக்கும் டொலர்களுக்கு தலா 210 ரூபாய் வீதம் செலுத்துவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இவ்வாறான நிலையில் வெளிநாடுகளில் இருந்து டொலர்களை அனுப்பி வைப்பதற்கான உரிய கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை தமது நேரம் மற்றும் வலுவை செலவிட்டு, இலங்கையின் வங்கி அல்லது நிறுவனத்தை தேடி நீண்ட தூரம் செல்வதை விட, இவ்வாறு பணத்தை அனுப்புவது தமக்கு இலகுவானது என்பதுடன் இலாபகரமானது எனவும் வெளிநாட்டுவாழ் இலங்கையர்கள் கூறுகின்றனர்.