இஷாரா செவ்வந்திக்கு உதவிய பெண் சட்டத்தரணி தொடர்பில் பகீர் தகவல்கள்!
கனேமுல்லை சஞ்ஜீவ கொலை சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைவதற்குரிய ஏற்பாடுகளை செய்த பெண் சட்டத்தரணி தொடர்பில் முக்கிய பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிழல் உலக தாதா கணேமுல்ல சஞ்ஜீவ, அளுத்கடை நீதிமன்றத்துக்குள் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தார். துப்பாக்கிதாரிக்கு, சட்டப்புத்தகத்துக்குள் மறைத்து செவ்வந்தியே துப்பாக்கியை கொண்டு சென்று, நீதிமன்ற வளாகத்தில் வழங்கியுள்ளார்.

பெண் சட்டத்தரணிக்கு, பாதாள குழுவுடன் தொடர்பு
துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்ற மறுநாள், துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டிருந்தார். 245 நாட்களுக்கு பிறகு செவ்வந்தியும், ஏனைய ஐவரும் நேபாளத்தில் கைதாந நிலையில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் இக்கொலைச்சம்பவத்துக்கு உதவிய 55 வயது பெண் சட்டத்தரணியொருவர் சிஐடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கடவத்தை பகுதியை சேர்ந்தவர் என தெரியவருகின்றது. கணேமுல்ல சஞ்ஜீவ கொலையின் பிரதான சூத்திரதாரியான இஷாரா செவ்வந்திக்கு, சட்டப்புத்தகம், சட்டத்தரணிகள் பயன்படுத்தும் பாஸ், சட்டத்தரணிகளுக்குரிய அடையாள அட்டை என்பவற்றை இந்த பெண் சட்டத்தரணியே ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.

கைதாகியுள்ள பெண் சட்டத்தரணிக்கு, பாதாள குழு உறுப்பினர் கெஹேல் பத்தர பத்மேவுடன் தொடர்பு இருந்துள்ளமையும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பத்மேவின் ஆலோசனைக்கமையவே இவர் கொலை திட்டத்துக்குரிய ஏற்பாடுகளை செய்துகொடுத்திருக்கலாம் என கூறியுள்ள பொலிஸார், சட்டத்தரணியின் வங்கிக்கணக்கு உட்பட பல விடயங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.