கொட்டாஞ்சேனை மாணவி அம்ஷி மரணம் தொடர்பில் தாயார் நீதிமன்றில் கூறிய அதிர்ச்சித் தகவல்கள்
கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றின் ஆறாவது மாடியிலிருந்து கீழே குதித்து சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட பாடசாலை மாணவி அம்ஷியின் தாய் இன்று (22) கொழும்பு கூடுதல் நீதவான் மபாத் ஜெயவர்தன முன்னிலையில் ஆஜராகி மகளின் மரணம் தொடர்பாக வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
குறித்த வாக்குமூலத்தில் ,பம்பலப்பிட்டி கல்லூரியின் கணித ஆசிரியரின் துன்புறுத்தல் மற்றும் தனியார் கல்விநிறுவன உரிமையாளரின் அவமதிப்பினால் மன அழுத்தத்தைத் தாங்க முடியாமல், தனது மகள் அவமானத்தால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தான் நம்புவதாக நீதிமன்றில் தெரிவித்தார்.
கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரி ஆர்.எஸ்.கே.ஏ. கெலும் பிரியந்தவின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்ட சாட்சியப் பரிசோதனையின் போது, அதிகாரி கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது அவர் பின்வருமாறு கூறினார்.
பொலிஸ் அதிகாரி : "டியூஷன் ஆசிரியர் உங்கள் மகளைத் திட்டுவது மற்றும் பல்வேறு அழுத்தங்களைப் பிரயோகிப்பது குறித்து பொலிசில் புகார் அளித்தீர்களா?" தாய்: “நான் புகார் செய்யவில்லை." பொலிஸ் அதிகாரி : “உங்க மகள் இதற்கு முன் தற்கொலைக்கு முயன்றிருக்கிறாளா?"
தாய்: “ஆமாம், அவள் இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றாள். ஒரு முறை அவள், அளவுக்கு அதிகமாக மருந்து உட்கொண்டாள். மற்றொரு முறை அவள் வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாள்."
பொலிஸ் அதிகாரி: “உங்கள் மகள் மனக் குழப்பத்தால் அவதிப்படுவதால், அவளைத் தனியாக அனுப்ப வேண்டாம் என்று மருத்துவக் குழு உங்களுக்கு அறிவுறுத்தியதா?"
தாய்: “ஆம், எனக்கும் என் கணவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது."
பொலிஸ் அதிகாரி: "அப்படி ஒரு அறிவிப்பு இருந்தும், ஏன் அந்த மகளை தனியாக ஒரு டியூஷன் வகுப்பிற்கு அனுப்பினீர்கள்?”
தாய்:" அவள் எப்போதும் தன்னைச் சிறைபிடித்து வைத்திருப்பதாகக் கூறுகிறாள். அவளுடைய டியூஷன் வகுப்பு வீட்டிற்கு அருகில் உள்ளது, அதனால்தான் அவள் அனுப்பப்பட்டாள்.
பொலிஸ் அதிகாரி : "உங்கள் மகள் தற்கொலை செய்து கொள்ள முன்னர் ஏதாவது நடந்ததா?”
தாய்: "ஆம், ஒரு சம்பவம் நடந்தது."
பொலிஸ் அதிகாரி: “என்ன ஆச்சு?”
தாய்: "ஏப்ரல் 26 ஆம் திகதி மாலை 6 மணியளவில், என் மகள் மேல் தளத்தின் ஏழாவது மாடிக்குச் சென்றாள். நானும் அந்த இடத்திற்குச் சென்றேன். நான் சென்றபோது, என் மகள் பால்கனியில் ஒரு புத்தகத்தை கையில் வைத்திருந்தாள். புத்தகத்தின் உள்ளே ஒரு பூ இருந்தது. அங்கேதான் மகள் கீழே குதித்தாள்."
பொலிஸ் அதிகாரி: “மகளை அங்கே பார்த்த பிறகு நீங்கள் என்ன செய்தீர்கள்?"
தாய்: “நான் என் மகளிடம் கவலைப்படாதே, மருந்து வாங்கப் போகலாம்னு சொல்லிட்டு அவளை எங்களோட கூட்டிட்டுப் போனேன்.”
பொலிஸ் அதிகாரி: "ஏப்ரல் 28 இரவு உங்கள் மகள் யாரிடமாவது 'என்னைக் காப்பாற்றுங்கள்' என்று சொல்வதைக் கேட்டீர்களா?"
தாய்: “ஆமாம், வீட்டை விட்டு வெளியேற அவள் பிடிவாதமாக இருந்ததால் நாங்கள் கதவை மூடிக்கொண்டிருந்தோம். அந்த நேரத்தில், அவள், 'ஐயோ, செக்கியூரிட்டி அங்கிள், என்னைக் காப்பாற்று!' என்று கத்துவதைக் கேட்டேன்.”
பொலிஸ் அதிகாரி : "ஏப்ரல் 29 அன்று என்ன நடந்தது?"
தாய்: "என் மகள் ஒரு வகுப்புக்குச் செல்ல வேண்டும் என்று சொன்னாள்."
பொலிஸ் அதிகாரி: “நீங்கள் என்ன செய்தீர்கள்?"
தாய்: "அன்று மதியம் 3:00 மணியளவில் என் மகள் வகுப்பிற்குச் செல்வதாகக் கூறி லிஃப்டில் இறங்கத் தயாராகிக் கொண்டிருந்தாள். அவள் கீழே இறங்குகிறாளா என்று நான் பால்கனியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவள் கீழே இறங்கி தெருவுக்குள் நுழைவதை நான் பார்க்கவில்லை, அதனால் என் மகள் கீழே செல்லவிருந்த லிஃப்டுக்குச் சென்றேன். அந்த நேரத்தில், வெளியே பெரிய சத்தம் கேட்டது. நான் பால்கனிக்குச் சென்று கீழே பார்த்தபோது, என் மகள் தெருவில் தரையில் கிடப்பதைக் கண்டேன். “என் மகள் ஒரு வாகனத்தில் மோதியிருக்கலாம் என்று நினைத்தேன்."
பொலிஸ் அதிகாரி: “அடுத்து என்ன நடந்தது?"
தாய்: “இரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்த என் மகளை என் கணவருடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். மருத்துவமனையில், என் மகள் இறந்துவிட்டாள் என்று அறிந்தேன்." என்றார். தாயாரின் சாட்சியம் இன்று முடிவடைந்த நிலையில், சிறுமியின் தந்தையின் சாட்சியம் இந்த மாதம் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.'