சன்ஷைன் சுத்தா சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் வெளியான தகவல்கள்
மாத்தறையில் சுட்டுகொல்லப்பட்ட பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த சன்ஷைன் சுத்தா சம்பவம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரபல போதைப்பொருள் விநியோகஸ்தரான ‘சன்ஷைன் சுத்தா’ என்ற அமில பிரசன்ன ஹெட்டிஹேவா சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த நபர் சில காலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த நிலையில்,மாத்தறை வரகாபிட்டிய பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த சன்ஷைன் சுத்தா என்ற அமில பிரசன்னா ஹெட்டிஹேவ தனது காதலி வீட்டுக்கு வருவதை அவதானித்து அந்த வழியிலேயே சுடப்பட்டுள்ளார். 31 வயதான சன்ஷைன் சுத்தா, மாத்தறை மிரிஸ்ஸ பகுதியில் வசிக்கிறார.
ஒரு ஹோட்டல் உரிமையாளர் மற்றும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளார். அவர் போதைப்பொருள் வர்த்தகராகவும் அறியப்பட்டுள்ளார். தென் மாகாணத்தின் மற்றொரு முன்னணி போதைப்பொருள் விற்பனையாளரான ‘ஹரக் கட்டா’ தலைமையிலான ஆயுதக் கும்பலால் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
ஹரக் கட்டா தற்போது துபாயில் தலைமறைவாக உள்ளார். அங்கிருந்து அவர் இலங்கைக்குள் போதைப்பொருள் கடத்தலை நடத்தி வருகிறார். ‘சன்ஷைன் சுத்தா’ நீண்ட காலமாக மாகந்துரே மதுஷுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார்.
துபாயில் அவர் நடத்திய விருந்திலும் கலந்து கொண்டிருந்தார். அந்த விருந்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் டுபாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சன்ஷைன் சுத்தாவும் துபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பல மாதங்கள் சிறையில் இருந்தார். பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார். சன்ஷைன் சுத்தா மாத்தறை கொட்டாவில பகுதியில் ஒரு பெண்ணுடன் உறவு வைத்துள்ளார்.
அவர் நேற்று முன்தினம் காலை காதலி வீட்டிற்கு வந்தார். சில மணி நேரம் கழித்து, மதிய உணவுப் பொதியுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.
சன்ஷைன் சுத்தாவின் வாகனம் வீதியில் சென்று கொண்டிருந்த போது, ஆயுதக் குழு ரி -56 துப்பாக்கிகளால் தாக்கியபோது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சுவரில் மோதியது. தாக்குதலில் கொல்லப்பட்ட சன்ஷைன் சுத்தாவின் சடலத்தின் மாதிரியை சோதனையிட்டதில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.