நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மருந்து தொடர்பில் வெளியான தகவல்
நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள “ஒன்டன் செட்ரான்”மருந்து தயாரிப்பு நிறுவனமான மான் பார்மாசூட்டிகல்ஸ் (Maan Pharmaceuticals) , சர்ச்சைக்குரிய குறித்த மருந்தை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு இலங்கை சுகாதார அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளது.
அந்த நிறுவனம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை, அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் மற்றும் மருத்துவ வழங்கல் பிரிவு ஆகியவற்றுக்கு கடிதம் ஒன்றின் மூலம் இந்தக் கோரிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.

சர்வதேச ரீதியிலான பரிசோதனை
சர்வதேச ரீதியிலான இந்தப் பரிசோதனைக்கு ஆகும் அனைத்துச் செலவுகளையும் ஏற்கத் தாங்கள் தயாராக இருப்பதாக மான் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளதை தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை தலைவர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம உறுதிப்படுத்தியுள்ளார்.
பக்கவிளைவுகள் ஏற்பட்டதாகக் கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து இலங்கையில் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட சர்ச்சைக்குரிய ஒன்டன்செட்ரான், மான் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 10 வகையான ஊசி மருந்துகளின் பயன்பாட்டைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கு தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.