மாத்தறை வைத்தியசாலையில் உயிரிழந்த பச்சிளம் குழந்தை! நீதவான் அதிரடி உத்தரவு
மாத்தறை புதிய மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த சிசுவின் அடையாளத்தை உறுதிப்படுத்த டி. என். ஏ. பரிசோதனையை முன்னெடுக்குமாறு அந்த மாவட்டத்தின் பிரதான நீதவான் அருண புத்ததாச இன்றையதினம் உத்தரவிட்டுள்ளார்.
தமது சிசு தொடர்பில் DNA பரிசோதனை செய்யுமாறு பெற்றோர்கள் கோரியபோது, வைத்தியசாலையின் பணிப்பாளர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பின்னணியில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை பிரதான நீதவான் அருண புத்ததாச வைத்தியசாலைக்கு வந்து, வைத்தியசாலை அதிகாரிகள் பெற்றோரிடம் காட்டியதாகக் கூறப்படும் சிசுவின் சடலத்தை பரிசோதனைக்கு உட்படுத்தியதன் பின்னர் நீதவான் இந்த உத்தரவை வழங்கினார்.
மேலும், சடலத்தை பிரேத பரிசோதனை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மாத்தறை வெலிகம பகுதியைச் சேர்ந்த 24 வயதான காவிந்த்யா மதுஷானி என்ற குடும்பப் பெண் முதல் குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக மாத்தறை புதிய மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 22ஆம் திகதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மதுஷானி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்ட தினமே குழந்தையை பிரசவித்திருந்த நிலையில், குழந்தை உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருப்பினும், குழந்தையின் பெற்றோருக்கு இதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
வைத்தியசாலை அதிகாரிகள் குழந்தையின் சடலத்தை பெற்றோரிடம் காட்டாமல் இருந்ததும், மற்றும் இது குறித்து அதிகாரிகள் முன்னுக்குப் பின் முரணான கருத்துகளை தெரிவித்து வந்ததும் இதற்கு காரணமாக அமைந்துள்ளது.
சிசு இறப்பு ஏற்பட்டால் வைத்தியசாலையில் கடைப்பிடிக்கும் வழக்கமான நடைமுறை என்ன என்று மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர் ஒருவரிடம் நாம் வினவியிருந்தோம்.
இதன்போது, சடலம் தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு ஒரு வைத்தியசாலை கண்டிப்பாக பெற்றோரிடம் சம்மதம் கேட்கும் என்றார்.
இவ்வாறானதொரு பின்னணியில், சிசு பற்றிய தகவல்களை இந்தப் பெற்றோரிடம் இருந்து வைத்தியசாலை அதிகாரிகள் மறைத்துள்ளனரா?