பாகிஸ்தான் வான் வெளியை மூடியதாதல் பாரிய இழப்பில் இந்திய விமான நிறுவனங்கள் !
பாகிஸ்தான் வான் வெளியை ஒரு வருடத்திற்கு மூடப்பட்டால், ஏர் இந்தியா 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (சுமார் 5,081 கோடி இந்திய ரூபா) இழப்பை சந்திக்கும் என்று மதிப்பிட்டுள்ளது.
ஏப்ரல் 22 ஆம் திகதி ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர், இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தான் வான் வெளியை இந்திய விமானங்கள் செல்ல தடை விதித்தது.
திக்குமுக்காடும் இந்திய விமான நிறுவனங்கள்
பாகிஸ்தான் வான் பரப்பு மூடப்பட்டதன் தாக்கம் குறித்து ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட பல விமான நிறுவனங்கள் தேசிய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் தங்கள் உள்ளீடுகளையும் பரிந்துரைகளையும் அளித்ததாக கூறப்படுகின்றது.
அமைச்சு நிலைமையை மதிப்பிட்டு, இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சாத்தியமான தீர்வுகளைப் பரிசீலித்து வருவதாகவும் , பாகிஸ்தான் வான் பரப்பு மூடல் குறித்து விவாதிக்க அமைச்சு அண்மையில் பல்வேறு விமான நிறுவனங்களுடன் ஒரு சந்திப்பை நடத்தியது.
இந்நிலையில் பாகிஸ்தான் ஒரு வருடத்திற்கு வான்வெளி மூடல் அமலில் இருந்தால் மேலதிக செலவுகள் சுமார் 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும் என ஏர் இந்தியா மதிப்பிட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
செலவுகளைக் குறைக்க உதவும் மாற்று வழிகள் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை விமான நிறுவனம் பரிசீலித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
அதேவேளை இந்தியாவின் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஆகாசா ஏர் ஆகியவை சர்வதேச சேவைகளைக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.