இந்திய மருந்து விநியோகத்தர்களால் இலங்கையில் மருந்து விலைகள் அதிகரிக்கும் சாத்தியம்
இலங்கையில் மருந்து இறக்குமதி தொடர்பான நடைமுறைகளில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காரணமாக, எதிர்காலத்தில் மருந்துப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இறக்குமதி உரிமங்கள் புதுப்பிப்பதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் மருந்துகளின் விலைகளை குறைக்குமாறு தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை (NMRA) விடுத்த கோரிக்கைகள் தொடர்பில் இந்திய மருந்து விநியோகஸ்தர்கள் கவலை வெளியிட்டிருந்தனர்.
இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இலங்கை அரசாங்கம் சாதகமான அணுகுமுறையை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, மருந்து விலைகளில் மாற்றம் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் மொத்த மருந்துத் தேவைகளில் சுமார் 30 சதவீதம் இந்திய இறக்குமதிகளைச் சார்ந்துள்ளது. 1,000-க்கும் மேற்பட்ட மருந்துப் பொருட்களுக்கான இறக்குமதி அனுமதிகளில் ஏற்பட்ட தாமதம் மற்றும் விலை கட்டுப்பாட்டில் இல்லாத மருந்துகளுக்கும் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்படுவது தொடர்பாக இந்திய விநியோகஸ்தர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, இந்திய உயர்ஸ்தானிகராலயம் இந்த விவகாரத்தை இலங்கை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், அமெரிக்க டொலரின் பெறுமதி மாற்றங்கள் மற்றும் இறக்குமதி செலவுகள் அதிகரித்துள்ளமை தொடர்பிலும் விநியோகஸ்தர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த விடயங்களில் இலங்கை அதிகாரிகள் தற்போது நெகிழ்வான அணுகுமுறையை கடைப்பிடித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் தற்போது 61 வகையான மருந்துகள் விலை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. இவை சந்தையின் சுமார் 30 சதவீதத்தை உள்ளடக்கியுள்ளதுடன், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இம்மருந்துகளின் விலைகளை அதிகரிக்க அனுமதி வழங்கப்படவில்லை.
மேலும், இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பால், உள்நாட்டில் தயாரிக்கப்படும் மருந்துகளின் விலைகளும் அடுத்த மாதம் முதல் உயரக்கூடும் என சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.