இலங்கையின் புனரமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்க வேண்டும் என வலியுறுத்து
அனர்த்தத்துக்கு பின்னரான இலங்கையின் புனரமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்க வேண்டும் என பாத்ஃபைண்டர் அறக்கட்டளையின் நிறுவுனரும் இந்தியாவுக்கான முன்னாள் உயர்ஸ்தானிகருமான மிலிந்த மொரகொட முன்மொழிந்துள்ளார்.
அண்மையில் புது டெல்லிக்கு விஜயம் செய்த மிலிந்த மொரகொட, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்ட பலருடன் சந்திப்புகளை மேற்கொண்டார்.

அத்துடன், இந்தியாவின் வெளிவிவகார அமைச்சின் அழைப்பின் பேரில், 4வது இந்தியா–ஜப்பான் மன்றத்திலும் அவர் பங்கேற்றார்.
இந்திய மற்றும் ஜப்பானியத் தலைவர்கள் இருதரப்பு மற்றும் மூலோபாய பங்காண்மைகளின் எதிர்காலத்தை கலந்துரையாடி வடிவமைக்கும் தளமாக இந்த மன்றம் விளங்குகிறது.
இந்தநிலையில், இந்தியா–ஜப்பான் மன்றத்தில் மிலிந்த மொரகொட அளித்த தனது சமர்ப்பிப்பில், அனர்த்தத்துக்கு பிந்தைய இலங்கையின் புனரமைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு இந்தியா தலைமை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த முயற்சியில் ஜப்பானை ஒரு வியூகப் பங்காளராகச் சேர்க்க வேண்டும் என்றும் மிலிந்த மொரகொட முன்மொழிந்தார்.
இந்த மன்றத்தில், பொருளாதாரப் பாதுகாப்பு, வர்த்தகம், அணுசக்தி, டிஜிட்டல்மயமாக்கல், மூலோபாய கனிமங்கள் மற்றும் முதலீடு உட்பட இந்தியா–ஜப்பான் ஒத்துழைப்பு தொடர்பான பல்வேறு முக்கியப் பிரச்சினைகளைப் பற்றி கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.