இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் கோடீஸ்வரர்!
இந்தியாவின் பணக்காரராக திகழும் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி (Gautam Adani) இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். அதானி குழுமம் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்திக்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், அவர் இங்கு வருகை தந்துள்ளார்.
கெளதம் அதானி (Gautam Adani) அவரது மகன் மற்றும் அதானி பசுமை எரிசக்தி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் உள்ளிட்டோரும் நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
துறைமுகம், எரிசக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி செயற்றிட்டம் தொடர்பில் இலங்கையின் உயர் அதிகாரிகளுடன் கௌதம் அதானி கலந்துரையாடவுள்ளார்.
அவர், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம் தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் (Gotabaya Rajapaksa) இன்று கலந்துரையாடினார். இதனிடையே, கௌதம் அதானி உள்ளிட்ட இந்திய வர்த்தகர்கள் சிலர் இன்று மாலை மன்னாருக்கு சென்றுள்ளனர்.
இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 51 வீத பங்கை வழங்கும் உடன்படிக்கை கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது. West Container International Terminal எனும் புதிய கூட்டு நிறுவனமொன்றினூடாக, இந்த மேற்கு முனையத்தின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு இதற்கு முன்னர், இந்தியா, ஜப்பான் மற்றும் இலங்கைக்கு இடையில் கூட்டுத் திட்டமாக பிரேரிக்கப்பட்டிருந்தது. தற்போதைய கோட்டாபய அரசாங்கம் அந்தத் திட்டத்தை நிறுத்தி, மேற்கு முனையத்தை அதானி குழுமம் தலைமையிலான கூட்டுத் திட்டத்திற்கு வழங்கியுள்ளது.