அதிரடி நடவடிக்கையில் இறங்கிய இந்தியா; கவலை தெரிவித்த சீனா!
நாட்டின் பாதுகாப்புக்கும் மக்களின் தன்மறைப்பு உரிமை கொள்கைக்கும் அச்சுறுத்தல் அளித்து வரும் சீன செயலிகளை இந்தியா தொடா்ந்து முடக்கி வரும் நிலையில் இந்தியாவின் இந்த செயலுக்கு சீனா கவலை வெளியிட்டுள்ளது.
அதனபடி கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூனில் டிக்டாக், யுசி பிரௌசா் உள்ளிட்ட 59 சீன செயலிகளை மத்திய அரசு முடக்கியது. ஏற்கெனவே முடக்கப்பட்ட செயலிகளின் நகல்களாக அறியப்பட்ட மேலும் 47 செயலிகள் அதே ஆண்டு ஆகஸ்டில் முடக்கப்பட்டன.
2020-ஆம் ஆண்டு செப்டம்பரில் மேலும் 118 சீன செயலிகளை இந்திய அரசு முடக்கியது. அந்த ஆண்டில் மட்டும் ஒட்டுமொத்தமாக 267 சீன செயலிகள் முடக்கப்பட்டன. மேலும் 54 சீன செயலிகளை மத்திய அரசு கடந்த திங்கள்கிழமை முடக்கியது.
மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த பரிந்துரையை ஏற்று அச்செயலிகளை மத்திய தகவல்-தொழில்நுட்ப அமைச்சகம் முடக்கியது. அந்தவகையில் ஸ்வீட் செல்ஃபி ஹெச்டி, பியூட்டி கேமரா, வைவா விடியோ எடிட்டா், டென்செண்ட் எக்ஸ்ரிவா் உள்ளிட்ட செயலிகள் முடக்கப்பட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், செயலிகள் முடக்கப்பட்டிருப்பது குறித்து கவலை தெரிவித்துள்ள சீனா, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அனைவரையும் இந்தியா வெளிப்படையாகவும் நியாயமாகவும் நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சீன வர்த்தகத்துறை செய்தித் தொடர்பாளர் காவோ ஃபெங் கூறுகையில்,
"இருதரப்பு பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பில் நல்ல வளர்ச்சி வேகத்தை பராமரிக்க இந்தியா உறுதியான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.
சீன நிறுவனங்கள் உள்பட அனைத்து வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் இந்தியா வெளிப்படையான, நியாயமான மற்றும் பாரபட்சமற்ற முறையில் நடத்தும் என நம்புகிறோம் என கூறியுள்ளார்.