அனுமதி இல்லாமல் கோதுமை மாவின் விலையை அதிகரித்த நிறுவனம்!
கோதுமையின் விலையினை அதிகரிப்பதற்கு நுகர்வோர் அதிகார சபை அனுமதி வழங்காத போதும் ப்றிமா நிறுவனம் கோதுமை மா விற்பனை விலையினை 12 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
சீனி பிரச்சினைக்கு தீர்வு காணும் வேளையில் கோதுமை மா பதுக்கப்பட்டுள்ளன. இவ்விடயம் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை உரிய நடவடிக்கைளை முன்னெடுக்க நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்தார்.
இதேவேளை உலக சந்தையில் கோதுமையின் விலை அதிகரித்துள்ளதாலும், இறக்குமதிக்கான செலவு அதிகரித்துள்ளமையாலும் கோதுமை மாவின் விற்பனை விலையை அதிகரிக்க அனுமதி வழங்குமாறு பிறிமா நிறுவனத்தினர் வர்த்தகத்துறை அமைச்சிடம் பேச்சுவார்தைகளை முன்னெடுத்தனர்.
விலை அதிகரிப்பிற்கு இதுவரையில் அனுமதி வழங்கப்படவில்லை. இருப்பினும் கோதுமை மா விற்பனை விலை அதிகரிப்பதற்கான சாத்தியம் அதிகளவில் காணப்படுகிறது என வர்த்தகத்துறை அமைச்சு குறிப்பிட்டது.
இதற்கமைய 87 ரூபாவிற்கு விற்கப்பட வேண்டிய ஒரு கிலோகிராம் கோதுமை தற்போது 99 ரூபாவிற்கு விற்கப்படுகிறது. 12 ரூபா தன்னிச்சையான முறையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. கோதுமை மாவின் விலை தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கொவிட் தாக்கத்தினால் நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பெரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலையை இறக்குமதி நிறுவனத்தினர் தன்னிச்சையான முறையில் அதிகரிக்கின்றமை வெறுக்கத்தக்க செயற்பாடாகவே கருத வேண்டும் என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் குறிப்பிட்டார்.