இலங்கையில் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
இலங்கையில் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
40 வயதைக் கடந்த நான்கு பேரில் ஒருவர் நீரிழிவு நோயினால் பாதிப்புக்குள்ளாவதாக இலங்கை மருத்துவர் சங்கத்தின் உறுப்பினர் பேராசிரியர் வைத்தியர் மந்திக்க விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
அண்மையில் முன்னெடுக்கப்பட்ட புதிய ஆய்வுகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில், கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அதிகமான நீரிழிவு நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மாவட்டங்களில் சுமார் 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் 33 வீதமானவர்கள் கடுமையாகப் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் இதயம் தொடர்பான நோய்கள், கை, கால் நரம்புத் தளர்ச்சி, கண்பார்வையில் குறைபாடு போன்ற பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இதனால் பாதிப்புகள் அதிகமாகி சிறுநீரகங்களும் செயலிழக்கும் அபாயம் காணப்படுகின்றது.
நீரிழிவுக்கான அறிகுறிகள் இருப்பின் உடனடியாக வைத்தியரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ளும்படியும், உணவுப் பழக்கவழக்கங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை மருத்துவர் சங்கத்தின் உறுப்பினர் வைத்தியர் மந்திக்க விஜேரட்ன தெரிவித்துள்ளார்.