யாழில் துப்பாக்கிச்சூடு; வலி கிழக்கு பிரதேசசபை ஈ.பி.டி.பி உறுப்பினர் உள்ளிட்ட மூவர் கைது!
வலி கிழக்கு பிரதேசசபை ஈ.பி.டி.பி உறுப்பினர் உள்ளிட்ட மூவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற சம்பவத்தை தொடர்ந்து வலிகாமம் கிழக்கு பிரதேசசபையின் ஈ.பி.டி.பி உறுப்பினர் உள்ளிட்ட மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊரெழு, பொக்கணை முருகன் கோயிலடியில் நேற்று இரவு சுன்னாகம் பொலிசார் வீதிக்கடமையில் ஈடுபட்டிருந்தனர். இதன் போது, தலைக்கவசம், முகக்கவசம அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த ஈ.பி.டி.பியின் பிரதேசசபை உறுப்பினர் ஒருவரை வழிமறித்ததை அடுத்து, அங்கு கூடிய இளைஞர்கள் சிலர் பொலிசாருடன் முரண்பட்டுள்ளனர்.
இதனையடுத்து அவ்விடத்தில் பொதுமக்கள் கூடியது , தர்க்கம் அதிகரிக்க பொலிசார் வானை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அதன்பின்னரே பொதுமக்கள் கலைந்து சென்ற பின்னர், போக்குவரத்து விதிகளை மீறிய குற்றச்சாட்டில், ஈ.பி.டி.பி உறுப்பினருக்கு தண்டச்சீட்டு வழங்கிவிட்டு பொலிஸார் அங்கிருந்து சென்றனர்.
இந்த நிலையில், இன்று காலையில் ஈ.பி.டி.பியின் பிரதேசசபை உறுப்பினர் உள்ளிட்ட 3 பேர் சுன்னாகம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைதானவர்கள்மீது பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.