தமிழர் பகுதியில் பெண் அரச அதிகாரிக்கு அரங்கேற்றப்பட்ட தகாத செயல் ; முன்னாள் மேயருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் மேயர் எதிர்வரும் செப்டம்பர் 9ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர் உடல்நலக் குறைவு காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதால், நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர்படுத்தப்படவில்லை.

விளக்கமறியல்
சிறைச்சாலை அதிகாரிகளின் அறிக்கைகளை பரிசீலித்த நீதிவான், சந்தேகநபரின் விளக்கமறியலை மேலும் நீடிக்க உத்தரவிட்டார்.
அக்கரைப்பற்று மாநகரசபை மேயராகப் பதவி வகித்த காலத்தில், அங்கு பணியாற்றிய பெண் அரச உத்தியோகத்தர் ஒருவரை திருமணம் செய்வதாகக் கூறி, பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக அவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் சமூக வலைத்தள நேரலை மூலம் குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, அம்பாறை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்திற்கு சென்றபோது சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
கடந்த மாதம் 18ஆம் திகதி முதன்முறையாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர், பின்னர் ஓகஸ்ட் 19ஆம் திகதி மற்றும் செப்டம்பர் முதலாம் திகதி என தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மூன்றாவது முறையாக செப்டம்பர் 9ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.