யாழ் மதுபான சாலைக்குள் நடந்த சம்பவம்; அச்சத்தில் கடையை பூட்டிவைத்துள்ள முதலாளி!
யாழ்.மாநகரில் உள்ள மதுபானசாலை ஒன்றுக்குள் முகத்தை மூடிய நிலையில் கறுப்பு ஆடை அணிந்த ஒரு குழுவினர் பலவந்தமாக நுழைந்து அங்கிருந்த பலரை தாக்கி இருவரை வாளால் வெட்டி காயப்படுத்தியுள்ள சம்பவம் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று முந்தினம் (04) இடம்பெற்ற நிலையில், வாள்வெட்டு மற்றும் தாக்குதல் சம்பவங்களில் காயமடைந்த மூவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மூவர் வைத்தியசாலையில் அனுமதி
இலங்கை பதில் பொலிஸ் மா அதிபர் யாழ்ப்பாணம் வந்து குற்றவாளிகள் மற்றும் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையவர்களை மிக விரைவில் கைது செய்வோம் என உறுதியளித்த பத்து மணித்தியாலங்களுக்குள் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அதேவேளை , தனது மதுபானக் கடைக்குள் அத்துமீறி நுழைந்த சிலரின் நடத்தையால் அச்சமடைந்த மதுபானக் கடையின் உரிமையாளர், சம்பவத்தின் பின்னர் தனது கடையை இதுவரை திறக்கவில்லை.
குற்றச்செயல்கள் அதிகரிப்பால் மக்கள் அச்சம்
இதேவேளை, சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் குழுவொன்று நகரின் நடுவில் விருந்து வைத்து, பொறுமையின்றி வீதியில் பயணித்தவர்களைத் தாக்கிய சம்பவங்கள் பதிவாகியிருந்தன .
இது தொடர்பாக, மாகாணத்தில் இதுவரை 6 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் தற்போது குற்றச் செயல்கள் நடந்துவருவதுடன், குடிபோதையில் பஸ் சாரதிகளைத் தாக்குவது, ஹோட்டல் உரிமையாளர்களிடம் பலவந்தமாக உணவு வழங்கக் கோருவது, ஹோட்டல்களை அடித்து நொறுக்குவது, வீதியில் செல்லும் மக்களை தடியடி நடத்தி பணத்தை கொள்ளையடிப்பது போன்ற குற்றச்செயல்களும் அதிகரித்துள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் பெருமளவிலான பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் இருக்கும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.