ரஷ்யாவின் வைத்திய அதிகாரிக்கு இலங்கையில் நடந்த சம்பவம் ; சீன பிரஜை செய்த செயல்
அபுதாபியில் இருந்து இலங்கை வந்த விமானத்தில் பயணித்த ரஷ்யாவின் பிரதம புலம்பெயர்வு வைத்திய அதிகாரியின் கைப்பைக்குள் இருந்த 9,900 அமெரிக்க டொலர்களைத் திருடிய சீனப் பிரஜை ஒருவர் கொழும்பு கோட்டை பகுதியில் உள்ள சூதாட்ட விடுதி ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி அதிகாலை 3.00 மணியளவில் அபுதாபியில் இருந்து எதிஹாட் ஏர்வேஸின் EY-394 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

சீனப்பிரஜை
இதில் பயணித்த ரஷ்ய நாட்டு வைத்தியர், தூங்கிக்கொண்டிருந்த வேளையில், பொதிகள் வைக்கும் இடத்திலிருந்து அவரது கைப்பைக்குள் இருந்து 9,900 அமெரிக்க டொலர்களை (இலங்கை ரூபாயில் சுமார் 31 இலட்சம்) சீனப்பிரஜை திருடியுள்ளார்.
விமானத்திலிருந்து இருந்து இறங்கிய பின்னர் பணத்தைக் காணவில்லை என்பதை அறிந்த வைத்தியர், அதிகாலை 4.00 மணியளவில் விமான நிலைய பொலிஸில் முறைப்பாடு செய்தார்.
விமான நிலைய சிசிரிவி காட்சிகளை ஆய்வு செய்த பொலிஸார் அந்த விமானத்தில் பயணித்த ஒரேயொரு சீனப் பிரஜை மட்டும் பாதுகாப்பு சோதனைகளைத் தவிர்த்து மிக வேகமாக வெளியேறி, வாடகை வாகனம் ஒன்றில் ஏறிச் செல்வதை அவதானித்தனர்.
அந்த வாடகை வாகனத்தை பின்தொடர்ந்த பொலிஸார், கொழும்பு கோட்டையிலுள்ள சூதாட்ட விடுதிக்குச் சென்றனர். அங்குள்ள பாதுகாப்பு கமராவைப் பரிசோதித்தபோது, குறித்த சீனப் பிரஜை அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பது உறுதியானது.
கைது செய்யப்படும்போது, அவர் திருடிய பணத்தில் 4,000 டொலர்களை சூதாட்டத்திற்காக ஏற்கனவே செலவழித்திருந்த நிலையில், எஞ்சியிருந்த 5,900 டொலர்கள் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டது
கைது செய்யப்பட்ட 49 வயதுடைய சீனப் பிரஜை இன்று வெள்ளிக்கிழமை (01) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.