தகாத உறவால் பறிபோன உயிர்; விபசாரத்திற்கு மறுத்ததால் கொலை
கணவரைப் பிரிந்து காதலனுடன் வாழ்ந்த இளம்பெண் விபசாரத்திற்கு மறுத்ததால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், கோணசீமா மாவட்டம், மெரகபாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பா (வயது 22). இவருக்கும் நெருங்கிய உறவினர் ஒருவருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
தலைமறைவான காதலன்
திருமணமான சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்தனர். அதன்பிறகு, புஷ்பா விஜயவாடாவிற்குச் சென்றார். அங்கு, கார் ஏசி மெக்கானிக்காகப் பணிபுரிந்த ஷேக் ஷாம் (வயது 22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியது.
இருவரும் அடிக்கடி சந்தித்து வந்த நிலையில், சித்தார்த்த நகரில் உள்ள பி. சவரம் கிராமத்தில் வாடகை வீடு எடுத்து கணவன்-மனைவி போல வாழ்ந்து வந்தனர். சில நாட்களில், ஷாம் மது போதைக்கு அடிமையானதனால், அவருக்கு பணத்தேவை அதிகரித்தது.
அவர் அடிக்கடி புஷ்பாவிடம் பணம் கேட்டு துன்புறுத்தினார். நேற்று முன்தினம் (16) இரவு 9 மணியளவில், ஷேக் ஷாம் வழக்கம்போல் குடிபோதையில் வீட்டிற்கு வந்து அவசரமாகப் பணம் தேவைப்படுவதாகவும், புஷ்பாவை விபசாரத்தில் ஈடுபடுமாறும் கூறினார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த புஷ்பா மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த ஷாம், மறைத்து வைத்திருந்த கத்தியால் புஷ்பாவைச் சரமாரியாகக் குத்தினார். இதில், புஷ்பா இரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததையடுத்து, ஷாம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார், புஷ்பாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள ஷேக் ஷாமைத் தேடி வருகின்றனர்.