யாழில் லட்சங்களை செலவழித்து ஆரம்பமான திட்டம் நாசமாகும் நிலையில்!
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி நீச்சல் தடாகம் போதிய பராமரிப்புகளின்றி பாழடைந்த நிலையில் காணப்படுவதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
இளைஞர்களுக்கான நாளைய அமைப்பினால் சுமார் 2 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்ட நீச்சல் தடாகம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் கடந்த 2012ஆம் ஆண்டு பெப்ரவரி 6 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து அங்கு சில மாத காலம் மாணவர்களுக்கான இலவச நீச்சல் பயிற்சி முகாம்கள் நடைப்பெற்றன. எனினும் பின்னர் நீச்சல் தடாகம் பராமரிப்புக்களின்றி கைவிடப்பட்ட நிலையில் ஆடைகள் மாற்றும் அறைகள் உடைந்த நிலையில் காணப்படுகின்றன .
இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அமைச்சரவை கூட்டத்தில் நீச்சல் தடாக புனரமைப்பு மற்றும் தொடர் பராமரிப்பு தொடர்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து , நீச்சல் தடாகத்தை புனரமைத்து சிறப்பான முறையில் பயன்படுத்துவதற்கான பொறிமுறையை உருவாக்குவது என தீர்மானிக்கப்பட்டது.
அதற்கு ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் இணக்கம் தெரிவித்திருந்தனர். எனிம் தற்போதுவரை அது புனரமைக்கபடாது உள்ள நிலையில், லட்சங்களை செலவழித்து ஆரம்பமான திட்டம் நாசமாகும் நிலையில் உள்ளதாக பிரதேசமக்கள் கூறுகின்றனர்.