துறைமுகத்தில் தேங்கி கிடக்கும் 2,000 மெட்ரிக் தொன் சோளம் ; திரிபோஷா உற்பத்தி தொடர்பில் வெளியான தகவல்
திரிபோஷா உற்பத்திக்காக கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 2,000 மெட்ரிக் தொன் சோளம் இதுவரை துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை திரிபோஷா நிறுவனத்தின் தலைவர் அமல் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அரசாங்க பொதுக் கணக்குகள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவான (COPE) குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

திரிபோஷா உற்பத்தி வீழ்ச்சி
இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டாளர் நாயகம் குறித்த சோளத் தொகையை விடுவிப்பதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்காமையே இந்த நிலைமைக்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த சோளத்தை இறக்குமதி செய்வதற்கு 2024ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி கிடைத்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், திரிபோஷா நிறுவனம் ஒருநாள் மூடப்பட்டால் 1.2 மில்லியன் ரூபாய் செலவு ஏற்படுவதாகவும் அவர் கோப் குழுவிடம் குறிப்பிட்டுள்ளார்.
இறக்குமதி செய்யப்பட்ட சோளத்தை விடுவிக்க முடியாத காரணத்தினால் கடந்த காலத்தில் திரிபோஷா நிறுவனம் இரண்டு மாதங்கள் மூடப்பட்டிருந்ததாகவும், விவசாய அமைச்சின் அனுமதிகளைப் பெறுவதில் ஏற்பட்ட தாமதங்களும் திரிபோஷா உற்பத்தி வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்ததாகவும் குழுக் கூட்டத்தில் தெரியவந்துள்ளது.
சோளத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத காரணத்தினால் கடந்த செப்டெம்பர் மாதத்தில் 536,000 திரிபோஷா பொதிகள் மாத்திரமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.