குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
கடவுச்சீட்டு பெறுவதற்கான ஒக்டோபர் மாத முற்பதிவுகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக கடவுச்சீட்டு பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக இந்த மாதத்துக்கான முற்பதிவுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளதாக அத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
அத்துடன் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கான தினங்கள் மற்றும் நேரங்களை பொதுமக்கள், முற்பதிவு செய்து கொள்ளமுடியும் என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் திகதி மற்றும் நேர முற்பதிவு வசதியின் கீழ், கடந்த சில நாட்களில் நாளாந்தம் 1,000 கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த திங்களன்று மாத்திரம் ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளின் கீழ், கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கான 4,700 விண்ணப்பங்கள் கிடைத்ததாகக் குறிப்பிட்ட அவர், கடவுச்சீட்டு பெறும் போக்கு இவ்வாறு இருப்பதன் காரணமாக திணைக்களம் கடுமையான சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் இருந்து இந்த நெரிசல் குறையும் என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.