முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் எடுத்துள்ள முக்கிய முடிவு!
50 ரூபா சில்லறை விலையில் முட்டை ஒன்றை விற்க முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த நிலையில், வர்த்தக அமைச்சருடன் இன்று (24-08-2022) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இதற்காக இணக்கம் காணப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் வெள்ளை முட்டையொன்றின் சில்லறை விலை 43 ரூபாவாகவும் சிவப்பு/ பழுப்பு முட்டை ஒன்றின் சில்லறை விலையை 45 ரூபாவாகவும் அறிவித்து நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் வர்த்தமானி வெளியிடப்பட்டது.
மேலும், முட்டை உற்பத்தி செலவை விட உற்பத்தியாளருக்கு 5 ரூபா லாபம் கிடைக்கும் வகையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக இது தொடர்பான விலையை அறிவித்த வர்த்தகத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இருப்பினும், கால்நடைத் தீவனத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில், அந்த விலைக்கு முட்டையை விற்க முடியாது எனக் கூறி, முட்டை உற்பத்தியாளர்கள் அந்த விலைக்கு உடன்படவில்லை.
இதன்படி முட்டை உற்பத்தியாளர் சங்கம் அண்மையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் பேச்சுவார்த்தை நடத்தியது.
இருப்பினும் இன்றைய கலந்துரையாடலின் பின்னர் சந்தையில் ஒரு முட்டையை 50 ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கு இரு தரப்பினரும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர்.
முட்டையின் விலை வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதையடுத்து, சந்தையில் முட்டையின் நிரம்பல் அபரிமிதமான வகையில் குறைந்துள்ளதாகவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், குறைந்த விலையில் அதிகபட்ச ஊட்டச்சத்தை வழங்கும் உணவான முட்டையின் விலை 60 ரூபா உயர்ந்து வருவதைத் தாங்கிக்கொள்ள முடியாதுள்ளதாக நுகர்வோர் முறைப்பாடு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.